Wednesday, June 1, 2011

ஓர் முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதியாகிறார்

ஓர் முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதியாகிறார்

திரு. ஆசிரியர் அவர்களுக்கு,

இரு தினங்களுக்குமுன் "முல்லா ஓமர் கொல்லப்பட்டார்" என்ற செய்தியைப் பல்வேறு செய்தித் தளங்களிலும்  தலைப்புச் செய்தியாக வாசிக்க நேர்ந்தது. இச்செய்தியை தினமணி, தினமலர் மற்றும் தட்ஸ்தமிழ் ஆகிய தமிழ் செய்தித்தளங்கள் வெளியிட்டிருந்தனர். அவர்களோடு இந்நேரம்.காமும் இச்செய்தியை வெளியிட்டிருந்ததையும் கவனித்தேன், என்றாலும் நான் அவதானித்த நுண்ணிய வேறுபாட்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முல்லா ஓமர் என்பவரை அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான்மீது படையெடுக்கும்வரை அநேகமாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

9/11 தாக்குதலுக்குக் காரணம் பின்லேடன் என்பதாக சர்வதேச செய்தி ஊடகங்களும் அமெரிக்காவின் குரலையே எதிரொலித்த நிலையில், "பின்லேடன் தங்கள் நாட்டின் கவுரவ விருந்தினர் என்றும், 9/11 தாக்குதலுக்குப் பின்லேடன் காரணம் என்பதற்கான ஆதாரங்களை ஒப்படைத்தால், முறையாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தவர்தான் முல்லா ஓமர்.

உலகச்சந்தையில் கொடிகட்டி பறந்த ஓபியம் என்ற போதைப்பொருளை ஐ.நா சபையின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, ஒழித்துக் கட்டுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டியபோதும் அதைத் தடுக்க முடியவில்லை. ஆனால் அப்போதைய ஆப்கன் ஜனாதிபதியாக இருந்த முல்லா ஓமர், ஒரேயொரு சட்டம் போட்டு சிலமாதங்களிலேயே பெருமளவில் குறைத்தார். மேலும், ஓபியம் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் நிறைவேற்றியதை ஐ.நா மற்றும் அமெரிக்காவும் பாராட்டியதோடு, முல்லா ஓமரின் அரசுக்கு உதவுவதற்காக நிதி உதவியும் செய்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

போலியான காரணங்களைச் சொல்லி, முன்முடிவுடன் போரிட்ட அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு ஐநாவும் உலகநாடுகளும் ஒத்து ஊதியதால், உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக போர்நிறுத்தம் மேற்கொண்டு தலை மறைவாக இருக்கும் ஆப்கானின் முன்னால் ஜனாதிபதி முல்லா ஓமரை, பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாகச் சொன்னது. தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்ட இச்செய்தியில் முல்லா ஓமரை அவன் - இவன் என்றும், பயங்கரவாதி என்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தட்ஸ்தமிழ் செய்தியாளாருக்கு முல்லா ஓமர் பயங்கரவாதி என்பது எப்படி தெரியும்? ஜனநாயக முறைப்படி ஒரு நாட்டுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமெரிக்காவின் எதிரிக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தார் என்ற காரணமன்றி, அதுவும் ஆதாரங்களை சமர்ப்பித்தால் விசாரித்து தண்டனை வழங்குவோம் என்று சொல்லியும், அமெரிக்கா அத்தகைய ஆதாரங்கள் எதையும் வழங்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் ஜனாதிபதியை எப்படி பயங்கரவாதி என்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது!

தங்கள் நாட்டின்மீதான ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களெல்லாம் பயங்கரவாதிகள் என்றால் நமது தேசப்பிதா காந்தி உள்ளிட்ட சுதந்திரப்போராட்டத் தியாகிகள் அனைவருமே இவர்களின் பார்வையில் பயங்கரவாதிகளா? என்று கேட்கத் தோணுகிறது.
ஒரு நாடு குற்றம் சுமத்தியுள்ள ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் ஜனாதிபதிகளெல்லாம் பயங்கரவாதிகள் என்றால், மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளி என அமெரிக்காவே ஒப்புக் கொள்ளும் டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பயங்கரவாதி தானே? தட்ஸ்தமிழ்.காம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவன் - இவன் என ஏக வசனத்திலும் பயங்கரவாதி ஒபாமா என்றும் தன் செய்திகளில் குறிப்பிடுமா?
பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு மாநகராட்சிக்கு ஒருவர் என்றளவில்கூட செய்தியாளர்கள் இருப்பதில்லை. இணையத்தில் மட்டும் செயல்படும் தட்ஸ்தமிழ்.காம் ஆங்கிலச் செய்திகளையும், பிற ஊடகங்களின் செய்திகளையும் வெட்டி, ஒட்டி சுட்டுதான் செய்திகளை நிரப்புகிறது என்பதை இணையத்தில் வலம்வரும் எம்போன்ற வாசகர்கள் அறிவர். இந்த லட்சணத்தில் எல்லைதாண்டிய செய்திகளை ஏனோதானோவென, பத்திரிக்கை தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல் செய்தி வெளியிடுகிறார்களே என்ற வேதனையில்தான் இதை வாசகர் மடல் பகுதிக்கு அனுப்புகிறேன்.

எம்போன்ற நடுநிலை வாசகர்களின் எதிர்பார்ப்பை இத்தகைய செய்தித்தளங்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதால் முடிந்தவரை அவர்களின் செய்திகளை சீரியசாக எடுக்கப்போவதில்லை. இந்நேரம்.காமில் வாசகர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடுநிலை செய்திகளும் வருவதாக அலுவலக நண்பர் சொன்னதன்பேரில் இந்த மடலை எழுதினேன். பிரசுரிக்கத் தகுதியானது என்று கருதினால் தயவு செய்து அடித்தல்/திருத்தலின்றி உங்கள் தளத்தில் வெளியிடவும்.

"மெய்ப்பொருள் காண்பதறிவு" தமிழ் வாழ்க! தமிழன் வாழ்க!
- கோ.வள்ளியப்பன், ஈரோடு.

நன்றி: இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM