தான் யார் என்பதையே மறந்த பாலஸ்தீன முஸ்லிம் சிறைவாசி
கான்யூனிஸ் நகரைச் சேர்ந்தவர் வதீ தம்மான். அவருக்கு வயது 30. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை இவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. தற்போது தன்னுடைய தண்டனைக் காலத்தை ஏறத்தாழ பூர்த்திசெய்துள்ள நிலையில் உள்ள அவர், நஃப்ஹா பாலைவனச் சிறையில் இருந்து நெகேவ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
"இந்தப் பலஸ்தீன் இளைஞர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையின் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய நிலைகுறித்து அவர் பலமுறை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியபோதும், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. எனவே, மிக நீண்ட காலமாக ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பின்னர், அவர் தன்னைப் பற்றிய சுயபிரக்ஞையை இழந்தவரானார். மிகக் கடுமையான ஞாபகமறதியால் அவதியுற்ற அவரை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் எய்ஷல் சிறைச்சாலைக்கு மாற்றியது. தான் யார் என்பதையே மறந்துபோய்விட்ட நிலையில் அவர் தற்போது வாழ்ந்து வருகிறார். தம்மானின் இன்றைய அவலநிலைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகத்தின் மிருகத்தனமான நடைமுறைகளும் மனிதாபிமானமற்ற அலட்சியப் போக்குமே காரணமாகும்" என 'ஹுஸாம்' எனும் சிறைக் கைதிகளுக்கான சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வதீ தம்மானின் தற்போதைய நிலை குறித்துக்கூறும் பலஸ்தீன் மனித உரிமைகள் அமைப்பு, "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாரையுமே அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவு அவர் தன்னுடைய சுயபிரக்ஞையை முற்றாக இழந்துவிட்டார். குறைந்தபட்சம் தன்னுடைய குடும்பத்தவரைக்கூட அவரால் இனம்காண முடியவில்லை. ஆரம்பத்திலேயே அவருடைய நோய் நிலையைப் பற்றித் தெரிந்தும், அவரைக் குணப்படுத்துவதற்கான எந்த ஒரு சிகிச்சையும் வழங்காமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் புறக்கணித்தமை மிகப் பெரும் மனித உரிமை மீறலாகும்" என சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM