வெல்பேர் பார்ட்டி: தலைமைக்கான போட்டி என அறிவு ஜீவிகள் விமர்சனம்
21 April 2011 - 11:46pm
நியூ டெல்லி: ஜமாஅத்-எ-இஸ்லாமி-யால் துவக்கப்பட்ட வெல்பேர் பார்ட்டி ஆப் இநதியா குறித்து கேட்ட போது "இது ஒரு சீரழிவு" என்கிறார் சிந்தனைவாதியும், புகழ் பெற்ற முஸ்லிம் சமூக அமைப்பின் சேர்மன்-ஆகவும் பதவிவகிப்பவர். சமூகத்தை ஒன்றிணைப்பதில் இது பெரும் தடைக்கல்லாக இருக்கும் என்பது வரும் காலங்களில் உறுதியாகும்.
அவர் மேலும் கூறுகையில், “Yeh kayee khabron men se ek khabar hai, politics ke bazaar ki ek aur dukan hai aur ittehad me sabse badi rukawat hai” (இது அன்றாடம் வெளியாகும் செய்திகளில் ஒன்றாகிப் போனது. இது அரசியல் எனும் சந்தையில் துவக்கப் பட்ட புதிய கடையாகும். ஆனால் சமூக ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும்) சமூக ஒற்றுமையையும், அமைதியையும் கட்டிக்காக்கும் நன்னோக்கோடு தனது பெயரை வெளியிட வேண்டாம் என்கிறார்.
ஜமாத்-எ-இஸ்லாமியின் முஸ்லிம் மஜ்லிசே முஷாவரத்-இல் முன்பு இணைந்து பணியாற்றியவரும், தேசிய ஒற்றுமைக் கழகத்தின் உறுப்பினருமான நவைத் ஹமித் இவ்விசயத்தில் கருத்துக்கூற மிகவும் தயங்குகிறார்.
முஸ்லிம் அரசியல் கட்சி பற்றிய சிந்தனை ஆபத்தானது
ஹமித், வெல்பேர் பார்ட்டி மீதுள்ள அதிருப்திக்கு பல காரணங்களைக் கூறுகிறார். மத சார்பற்ற அரசியலுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களை அரசியலில் வலிமைப் படுத்தும் நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், இந்தக் கட்சி ஆபத்தானதும், கெட்ட செய்தியுமாகும். வெல்பேர் பார்ட்டிக்கு சிறந்த எதிர் காலமோ, அரசியல் வெற்றியோ சாத்தியமில்லை, ஏனென்றால், முஸ்லிம்கள் நாடு முழுவதும் சிதறி வாழ்வதாலும், ஒரே மண்டலமாக சேர்ந்து வாழாததாலும் எந்த ஒரு தேசிய முஸ்லிம் அரசியல் கட்சியும் ஒரு போதும் வலிமையான அரசியல் சக்தியாக உருவெடுத்தது இல்லை என்கிறார். முஸ்லிம்கள் இந்தக் கட்சிக்கு தான் ஓட்டு போடவேண்டும் என்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை. இவருடைய வாதத்திற்கு சான்றாக கேரளா முஸ்லீம் லீக்கை உதாரணமாகக் காட்டுகிறார். இது ஒரு தேசியக் கட்சியல்ல. மாறாக, இது ஒரு மாவட்டக் கட்சியாகும். ஏனெனில், இது தன்னுடைய கிளைகளை மலப்புரம் மாவட்டத்தை விட்டு வெளியில் எங்கும் பரவுவதற்குண்டான எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மாநிலக் கட்சி என்று கூட கூற முடியாது என்கிறார் ஹமீத். இதைப் போலவே, அசதுத்தீன் ஒவைசி தலைமையிலான மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சி ஹைதராபாத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் நகரக் கட்சியாய் சுருங்கிப் போய் கிடக்கிறது, என ஹமீத் கூறிக் கொண்டே போகிறார்.
WPI கட்சித் தொண்டர்களுக்கு அரசியலுக்குரிய பக்குவம் இல்லை
WPI தொண்டர்கள் குறித்து பேசும்போது இன்னும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்: "அவர்கள் சமூக நடவடிக்கைகளைச் செய்பவர்கள், அரசியலுக்கு வருமளவுக்கு போதிய பக்குவம் இல்லை" என்கிறார். அவருடைய கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த கால தேர்தல் நடவடிக்கைகளைச் சொல்கிறார். ஒக்லா தொகுதிக்குட்பட்ட ஜாமியா நகரை எடுத்துக் கொள்ளுங்கள். WPI-இன் தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் SQR இலியாஸ் அவர்கள், அப்போதைய காங்கிரஸ் வேட்பாளராகிய பர்வேஸ் ஹாஷ்மி அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மக்கள் பர்வேஸ் ஹாஷ்மிக்குத் தான் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தனர். பர்வேஸ் ஹாஷ்மி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பிறகு ராஜ்ய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகு நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் Dr. இலியாஸ் அவர்கள் மக்களை காங்கிரஸ்-க்கு ஆதரவாக மாற்றி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து பிரச்சாரம் செய்தார். இம்முறையும் மக்கள் இவரது கோரிக்கையை புறம் தள்ளி காங்கிரஸ் வேட்பாளர்-ஐ தோல்வி அடையச் செய்தனர். ஆசிப் முஹம்மத் கான் என்ற RJD வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இருந்த போதிலும், இந்திய முஸ்லிம் அரசியல் அமைப்பின் தலைவர் Dr. தஸ்லீம் ரஹ்மானி அவர்கள் கூறும்போது, WPI -இன் அரசியல் கொள்கை மிகவும் அவசியமான ஒன்று எனவும், இது சமூகத்தால் பரிசோதிக்கப் படவேண்டிய ஒன்று என்றும் கூறுகிறார். சிந்தனை ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் WPI மிக வலுவாக உள்ளது என்கிறார் ரஹ்மானி. ஆனால், WPI -இன் தலைமையைத் தயக்கமின்றி குறை கூறுகிறார். நாவைத் ஹமீத் கூறியதைப் போல WPI தொண்டர்களையும் குறை காண்கிறார்.
தொண்டர்கள் தேர்வு செய்யும் முறையை வைத்து அரசியல் பக்குவத்தை சந்தேகப் படுகிறார் Dr. ரஹ்மானி. அவர்கள் கட்சி ஆரம்பித்த விதத்தையும், தொண்டர்கள் தேர்வு செய்த முறையையும் வைத்துப் பார்க்கும் போது, அவர்களால் தேர்தல் அரசியல் மூலமாக எதிர்பார்க்கும் பலனை அடைய முடியுமா என்ற சந்தேகம் வலுக்கிறது, என்கிறார். அவருடைய கருத்துப் படி WPI -ஆல் தேர்ந்தெடுக்கப் பட்ட தொண்டர்கள் தேர்தல் அரசியலில் பக்குவமற்றவர்கள்.
மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறி முஸ்லிம்களின் அரசியல் நிலையை நன்குணர்ந்துள்ள Dr. ரஹ்மானி அவர்கள் கூறும்போது, WPI-இன் தற்போதைய தலைவர்கள் (ஜமாஅத்-எ-இஸ்லாமியில் அங்கம் வகிக்காத) சமூகத்திலுள்ள தலைவர்களுக்கு பொறுப்பளிக்க தயங்குகிறார்கள். ஏனென்றால், எதிர் காலத்தில் கட்சியின் மீதுள்ள கட்டுப்பாடு ஜமாத்-ஐ விட்டுப் போய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதனால் WPI செய்யும் எல்லா அரசியல் செயல் திட்டங்களும் பயனற்ற முயற்சியாகிப் போகும் என்றும் வருத்தத்தோடு கூறுகிறார். (ஆசம்கர்-க்கு அருகிலுள்ள ஜான்பூர் தொகுதிக்கு உலமா கவுன்சில் சார்பாக Dr. ரஹ்மானி அவர்கள் போட்டியிட்டு தோற்றார். இதனால் கவுன்சிலில் இருந்து விலகி செயல்பட்டு வருகிறார்)
WPI -க்கு ஆதரவாக
WPI அமைக்கப்பட்டது குறித்து அதன் துணைத் தலைவர் Dr. ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில், கட்சி சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்பதை முற்றிலுமாக மறுக்கிறார். ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள நாங்கள் எப்படி சமூகத்தைப் பிளவு படுத்துவோம் என்று விளக்கமாகக் கூறுமாறு கேட்கிறார். நாங்கள் எப்போதுமே ஒத்த கருத்து கொண்டோரை ஒருமுகப் படுத்தி வலிமைப் படுத்துவோம் என்று கூறுகிறார் Dr. கான்.
புகழ் பெற்ற மில்லி கெஜட் ஆங்கில மாதமிருமுறை இதழின் ஆசிரியரிடம் Dr. கான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்: கட்சியைப் பற்றி இப்பொழுதே மதிப்பிடத் துவங்கி விட வேண்டாம். கட்சியிடமிருந்து உடனே எதையும் எதிர் பார்க்காதீர்கள். ஒரு அரசியல் கட்சிக்கு 4-5 வருடங்கள் கூட போதுமான காலங்களாக இல்லாத பொது, கட்சி துவங்கி இப்பொழுது தான் பயணத்தை துவங்கி உள்ளோம் என்கிறார் Dr. கான்.
கட்சி திடீரென எவ்வித திட்டமிடுதலுமின்றி இரவோடு இரவாக துவக்கப் படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக திட்டமிடும் பணியும், கட்சிக்கான ஆள் சேர்ப்புப் பணியும் முறையாக நடந்த பிறகு தான் கட்சியை துவக்கி உள்ளோம். WPI மிக ஆழமான, உறுதியான கட்டமைப்புகளோடு துவங்கப் பட்டுள்ளது. மாற்றுக் கருத்து கொண்டுள்ளோர் நினைப்பது போலல்ல என்று உறுதி படக் கூறுகிறார் Dr. கான்.
- நன்றி: Md. Ali, TwoCircles.net,
மற்றவர்களை குறை காண்பதும், அவமதிக்க முயல்வதும் ஒரு வகை வியாதி
ReplyDelete