Thursday, April 28, 2011

சிரியா கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா - விக்கி லீக் அதிர்ச்சி தகவல்!

E-mail அச்செடுக்க
அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்காவே காரணம் எனவும் அமெரிக்கா சிரிய போராட்டத்துக்குப் பண உதவி செய்வதாகவும் விக்கி லீக்ஸ் அதிர்ச்சிகர செய்தி வெளியிட்டுள்ளது.
அரபு நாடான சிரியாவில் அதிபர் பாஷார் அல்- ஆஷாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. துனீஷியா, எகிப்து போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கிய சிரியா போராட்டம் தற்போது வலுவடைந்துள்ளது.
போராட்டத்தை ஒடுக்க சிரிய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சிரியாவில் போராட்டம் வலுவடைந்துள்ளது. இந் நிலையில், "சிரியாவில் போராட்டம் நடக்க அமெரிக்காவே காரணம்" என விக்கி லீக் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவின் சட்டவிரோத செயல்ப்பாடுகளை வெளிப்படுத்திவரும் விக்கிலீக் இணையதளம் சமீபத்தில் சிரியா குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

அதில், "சிரியாவில் கலவரத்தைத் தூண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பண உதவி செய்தார். அத்துடன் சிரிய அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒளிபரப்ப லண்டனைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கும், புஷ் அரசு பண உதவி அளித்தது.
அதற்காக புஷ் மொத்தம் ரூ.30 கோடி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த தனியார் தொலைக்காட்சி சிரியாவில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. அதன் எதிரொலியாகத்தான் தற்போது அங்கு கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்  புஷ்சுக்கும், சிரியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே கடந்த 2005-ம் ஆண்டு டமாஸ்கஸ்சில் ஏற்பட்டது.

அவரது ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. ஒருபுறம் கலவரத்தைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் சிரியாவுடன் உறவைப் பலப்படுத்துவது போன்று அமெரிக்கா நடிக்கிறது. கடந்த 6 வருடத்தில் கடந்த ஜனவரி மாதம்தான் முதன் முதலாக சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா நியமித்தது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் இப்புதிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM